செவ்வாய், 12 ஜூன், 2012

பொம்மை

 விளையாட எத்தனை பொம்மை தந்தாலும்
என் விரல் தான் உனக்கு பிடித்த பொம்மையோ?

நீ என் விரல் பற்றி விளையாடும் போதெல்லாம்,
உன் கையில் பொம்மலாட்ட பொம்மையாய் நான்.

வியாழன், 7 ஜூன், 2012

ஒவ்வொரு நாளும் ஒரு கவிதை



ப்ரிய மகனுக்கு,
எவ்வளவோ எழுத ஆசைபட்டே
இவ்வலைப்பூவை தொடங்கினேன்
ஒவ்வொரு நாளும் ஒரு கவிதை
ஒவ்வொரு இரவும் ஒரு கதை
இப்படி இன்னும் எவ்வளவோ, ஆயினும்
எதுவுமே எழுத முடியவில்லை இந்நாள் வரை



என் முகம் கண்டு மலரும் உன் முகமும்
என் குரல் கேட்டு இனம்கண்டு சிந்தும்
உன் பொக்கை வாய் சிரிப்பும்
காணும் ஒவ்வொரு முறையும்
ஆயிரம் கவிதைகள் தோன்றும் என்னுள்ளே
வார்த்தைகள் அற்ற மொழியில் நாம் பேசி மகிழ்ந்த 
ஒவ்வொரு  சம்பாஷனையும் ஒரு சிறுகதையே
இயல் இசை நாடகம் எல்லாம் காட்டுகிறாய் 
உன் ஒவ்வொரு அசைவிலும் நீ 


இத்தனை இருந்தும், எழுதிட நினைக்கையில்
எல்லாம் மறந்து உன்  முகம் மட்டும் ஆடுது நினைவில்..


வியாழன், 1 மார்ச், 2012

தவமாய் தவமிருந்து



எத்துனை காத்திருப்பு எத்துனை எதிர்பார்ப்பு
எத்துனை ஏக்கம் எத்துனை தவிப்பு 
எத்துனை தவமடா உன் முகம் காண
நீ கருப் புகுந்த நாள் முதல் உன்
அன்னையவள், பொறுத்த வலி தான் எத்தனை எத்தனை

பிடித்ததை உண்ணவும் முடியாது
உண்டதை செரிக்கவும் முடியாது
வாயிலெடுத்த உபாதையால்
வந்த தலைவலியும் தீராது
ஊன் கெட்டு உறக்கம் கெட்டு
முகம் வெளிறி, நடை தளர்ந்து,
எடை கூடி, கையும் காலும் வீங்கி
ஒரு புறம் மட்டுமே படுத்து
இதற்கும் மேலாய் விலா முறிக்கும்
இடை வலி பொருத்து, உயிர் இறுத்து
இறுதியாய் பிரசவித்தாள் உன்னை

அன்னை கொண்ட அத்துனை வலியும்
தந்தையும் மனதால் கொண்டேனடா
தாய் கொண்ட வலி ஊர் அறியும்
தகப்பன் கொள்ளும் வலி யார் அறிவார்?

அத்துனை வலியும், அத்துனை தவிப்பும்
உனைக்கண்ட நொடியில் நெடுதவம்
ஒன்றின் நிறைவாய், இறையே எம்முன் தோன்றி
அருளாய் சொரிந்தார் போல
தேகம் உறைந்து கண்கள் பணித்து
நின்றேனே என் அய்யனே..

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

மழையின் மைந்தனுக்கு


எல்லோரும் மண்ணின் மைந்தர்கள் என்பது பொது
ஆயினும் மகனே,
நீ ஏன் மழையின் மைந்தன் என தெரியுமா?

மண், நிலத்துக்கு நிலம், இடத்துக்கு இடம்
மனிதனை போலவே மாறுபட்டு இருக்கும் 

செம்மை, கருமை, வெண்மை
வண்டல், கரிசல், களி என
மண்ணுக்கு நிறமும் இனமும் உண்டு.



ஆனால், எங்கேயும் எப்பொதும்
மழை மழையாகவே  பார்க்கப்படுகிறது
மழை நிறம் பார்க்காது இனம் பார்க்காது,
எவ்வித பேதமும் பார்க்காது 
செல்லும் இடம் எல்லாம் செழிக்கச்செய்யும்
குணம் மழைக்கு மட்டுமே உண்டு..

அதுபோலவே மகனே,
நீ செல்லும் இடம் எல்லாம் மாரிபோல்
பேதமில்லா அன்பை பொழியவே உனை
மழையின் மைந்தன் என விளித்தேன் நான் ..